search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்களை தேடி மருத்துவம்"

    • தவிட்டுப்பாளையம் பகுதியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்ட சிறப்பு முகாம்
    • சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது


    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் தட்டுப்பாளையம் பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மற்றும் சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று வீடுகளில் உள்ள முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகள் மற்றும் பொது மக்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்து ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு, மற்றும் உடல் பரிசோதனை,தலைவலி, காய்ச்சல், உடல் வலி, சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்து அவர்களுக்கு தேவையான உரிய மருந்து, மாத்திரைகளை வழங்கினார்கள்.


    • கிராமப்புற பகுதிகளில் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று, பரிசோதனை
    • படுக்கை நோயாளிகள் 8 ஆயிரத்து 792 பேருக்கும், புற்றுநோய் தொடர்புடைய 274 பேர்

    நாகர்கோவில் :

    மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் ஏராளமா னோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-

    மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ், கன்னியாகுமரி மாவட்டத்தின் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், நோய் பாதிப்ப டைந்தவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்க ளுக்கு மருந்து, மாத்திரைகள் மற்றும் மருத்துவ சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டத் திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களில் உயர் ரத்த அழுத்தம் நோயி னால் பாதிக்கப்பட்ட 91 ஆயிரத்து 532 பேருக்கும், நீரிழிவு நோயினால் பாதிக் கப்பட்ட 65 ஆயிரத்து 623 பேருக்கும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்ட 63 ஆயிரத்து 236 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    படுக்கை நோயாளிகள் 8 ஆயிரத்து 792 பேருக்கும், புற்றுநோய் தொடர்புடைய 274 பேருக்கும், உடற்பயிற்சி சிகிச்சை (பிசியோதெரபி) வாயிலாக 9 ஆயிரத்து 610 பேருக்கும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டுள் ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பெண் சுகாதார தன்னார்வலர்கள் 5 ஆயிரம் பேருக்கு ஒருவர் என்ற வகையில் பணியாற்றுகின்றனர்.
    • மக்களை பரிசோதனை செய்து அவர்களுக்கு மாதம் ஒருமுறை அல்லது 2 மாதத்திற்கு தேவையான மாத்திரைகளை வழங்கி வருகின்றனர்.

    சென்னை:

    தமிழகத்தில் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போன்ற நாள்பட்ட வியாதிகளுக்காக லட்சக்கணக்கானவர்கள் மாத்திரை சாப்பிட்டு வருகின்றனர்.

    அவர்களில் பலர் முறையாக மாத்திரைகள் எடுத்துக்கொள்ளாமல் இருப்பதால் வேறு பாதிப்புகள் உருவாகி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடுகிறது.

    பொதுமக்களில் பலர் பரிசோதனை செய்யாமல் இந்த மாதிரி வியாதிகள் இருப்பதே தெரியாமல் இருக்கிறார்கள். நோய் முற்றிய பிறகே இவர்களுக்கு சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் இருப்பது தெரிய வருகிறது.

    இதனால் பல்வேறு மற்ற வியாதிகளும் இவர்களை பாதிக்கச் செய்து விடுகிறது. மக்களை தேடி மருத்துவம் திட்டம் தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டது.

    இந்த திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கி வைத்தார்.

    இதை தொடங்கிய 6 மாதங்களில் 50 லட்சம் பயனாளர்களை இந்த திட்டம் சென்றடைந்தது. இதற்கான விழா மேடவாக்கத்தை அடுத்த சித்தாலப்பாக்கத்தில் அரசு நடத்தியது.

    அன்று முதல் இன்று வரை பொதுமக்களுக்கு அவர்களது இல்லம் தேடி சென்று மருத்துவ குழுவினர் இடைவிடாமல் மருத்துவ சேவையை செய்து வருகின்றனர்.

    இதில் 10,969 மகளிர் சுகாதார தன்னார்வலர்கள் தங்களை ஈடுபடுத்தி கொண்டு வீடு வீடாக இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். அனைவருக்கும் நலவாழ்வு மையங்களில் பணியமர்த்தப்பட்ட 4,848 இடைநிலை சுகாதார சேவையாளர்களும் இந்த திட்டத்தில் ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றனர்.

    இவர்களிடம் சர்க்கரை வியாதியை அறிந்து கொள்ளும் சுகர் கருவி, ரத்த அழுத்தத்தை கண்டறியும் கருவி ஆகிய இரண்டும் கைவசம் இருக்கும்.

    இதை வைத்து ஒவ்வொரு வருக்கும் பரிசோதனை செய்து அதன் அடிப்படையில் ஆஸ்பத்திரியில் மருந்து மாத்திரை வாங்கி அவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

    குறிப்பாக 45 வயதுக்கு மேற்பட்ட ரத்த அழுத்த நோயாளிகளின் வீடுகளுக்கு இந்த குழுவினர் தேடிச் சென்று சிகிச்சை பெற அறிவுறுத்துகின்றனர்.

    இதில் ஒரு பெண் செவிலியர், ஒரு தன்னார்வலர், ஒரு இயன்முறை மருத்துவர் என குழுவாகவும் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்து வருவது பாராட்டத்தக்கது.

    அதிலும் குழுவில் உள்ள பெண் சுகாதார தன்னார்வலர்கள் நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களை கண்டறிந்து இந்த திட்டத்தில் பயனாளிகளாக சேர்த்து அவர்களுக்கான மாத்திரைகளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து பெற்று நேரடியாக வழங்கி வருகின்றனர். அது மட்டுமின்றி ஒவ்வொரு பயனாளியும் மக்கள் நல பதிவில் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள்.

    இப்போது இந்த திட்டத்தின் மூலம் 1 கோடியே 49 ஆயிரத்து 180 பேர் பயன் அடைந்துள்ளனர்.

    இதில் உயர் ரத்த அழுத்த நோய் சிகிச்சை, நீரழிவு நோய் சிகிச்சை, இயன்முறை சிகிச்சை சிறுநீரக நோய்க்கு டயாலிசிஸ் செய்து கொள்வதற்கு தேவையான பைகள் பெற்றவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 49 லட்சத்து 180 பேர் ஆவார்கள்.

    தொடர் சேவைகள் மூலம் மறுபடியும் 2-வது முறை மருந்து சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 93 லட்சத்து 22 ஆயிரத்து 468 பேர் ஆகும்.

    இதன் மூலம் ஒவ்வொருவரின் உடல் ஆரோக்கியமும் பேணப்பட்டு வருவதாக அதிகாரிகள் பெருமிதம் கொள்கின்றனர்.

    இதுபற்றி பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது:-

    மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பெண் சுகாதார தன்னார்வலர்கள் 5 ஆயிரம் பேருக்கு ஒருவர் என்ற வகையில் பணியாற்றுகின்றனர். மக்களை பரிசோதனை செய்து அவர்களுக்கு மாதம் ஒருமுறை அல்லது 2 மாதத்திற்கு தேவையான மாத்திரைகளை வழங்கி வருகின்றனர்.

    இந்த வகையில் ரத்த அழுத்தம், நீரழிவு நோய் இயன்முறை சிகிச்சை பிசியோதெரபி சிகிச்சை, டயாலிசிஸ் செய்வதற்கு உதவிகள் என பல வகை நோய்களுக்கு சிகிச்சை பெற இவர்கள் ஏற்பாடு செய்து கொடுக்கின்றனர்.

    மக்களை தேடி மருத்துவம் திட்டம் முதற்கட்டமாக 50 வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு இப்போது அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இதன் மூலம் மேற்கண்ட சிகிச்சை மட்டுமின்றி பெண்கள் கருப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறிவதற்கான ஆய்வுக்கு பரிந்துரைப்பதன் மூலமும் ஏராளமான பெண்களும் முன் கூட்டியே சிகிச்சை பெற இந்த திட்டம் உதவிகரமாக அமைந்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆகஸ்டு மாதம் மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டது.
    • திருப்பூர் மாவட்டத்தில் 26 லட்சத்து 43 ஆயிரத்து 577 பேர் இருப்பதாக கணக்கிட்டு 20 லட்சத்து 3,831 பரிசோதனை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    திருப்பூர்:

    கடந்த 2021 ஆகஸ்டு மாதம் மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கென திருப்பூர் மாவட்டத்தில் 13 மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது.குழுவை சேர்ந்த மகளிர், சுகாதார தன்னார்வலர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று மருந்து, மாத்திரை வழங்கி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் 26 லட்சத்து 43 ஆயிரத்து 577 பேர் இருப்பதாக கணக்கிட்டு 20 லட்சத்து 3,831 பரிசோதனை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    நடப்பாண்டு ஏப்ரல் 20ந்தேதி நிலவரப்படி 19 லட்சத்து 72 ஆயிரத்து 656 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 53 ஆயிரத்து 650 பேருக்கு நீரிழிவு நோய் இருப்பதும் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 211 பேருக்கு உயர்ரத்த அழுத்தம் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. 40 ஆயிரத்து 847 பேருக்கு மேற்கண்ட இரண்டு பாதிப்புகளும் உள்ளது.

    வீட்டில் தங்கியுள்ள இடத்தில் இருந்து எழுந்து வர முடியாத நிலையில் 7,821 பேருக்கு மருந்து, மாத்திரை தொடர்ந்து வழங்கப்படுகிறது. 9,947 இயன்முறை மருத்துவம் பார்க்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் துவங்கிய இரண்டு ஆண்டுகளில் இரண்டு லட்சத்து 19 ஆயிரத்து 478 பேர் பயன் பெற்றுள்ளனர்.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறுகையில், வயதானவர், பொருளாதார நிலையில் மேம்பாடு அடைய வழியில்லாமல் உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை மேற்கொள்ள வேண்டியசிரமத்தில் உள்ளவர்களுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தங்கள் பகுதியில் உள்ள கிராம சுகாதார செவிலியர் அல்லது நகர்ப்புற நல மையத்தை அணுகிதிட்டம் குறித்த விவரங்களை மக்கள் அறிந்து கொள்ளலாம் என்றார்.

    • டவுன் கருவேலன் குன்று தெருவில் மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • பொதுமக்களுக்கு இலவசமாக பரிசோதனைகள் செய்யப்பட்டன.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் நகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா மற்றும் மாவட்ட காசநோய் தடுப்பு துணை இயக்குனர் வெள்ளைச்சாமி ஆகியோர் ஆலோசனையின் பேரில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் நெல்லை டவுன் கருவேலன் குன்று தெரு ரேஷன் கடை முன்பாக மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை டவுன் சுகாதார அலுவலர் இளங்கோ தொடங்கி வைத்தார். முகாமில் பொதுமக்களுக்கு நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் சளி, இருமல், பசியின்மை, எடை குறைதல், மாலை நேர காய்ச்சல், சளியில் ரத்தம் வருதல், போன்ற அறிகுறி உள்ளவர்களுக்கு இலவசமாக பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் முதுநிலை சிகிச்சை மேற்பார்வை யாளர் முருகன், ஆய்வக நுட்புணர் கண்ணன், ரேடியோ கிராபர் சிஜின், ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனர். இந்த முகாமில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    • சுகாதார துணை இயக்குனர் ஆய்வு
    • மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியம், நிம்மியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து திருப்பத்தூர் மாவட்ட துணை இயக்குநர் சுகாதார பணிகள் டாக்டர். த.ரா.செந்தில் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் 102 ரெட்டியூர் ஊராட்சி, முல்லை கிராமத்தில் துணை சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார். முல்லை கிராமத்தில் நடைபெற்று வந்த மக்களை தேடி மருத்துவம் திட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்து பொது மக்களுக்கு நேரடியாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறதா என்பதை கேட்டு அறிந்தார்.

    ஆய்வின் போது ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.ச.பசுபதி, நிம்மியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர்.செ.மதன்ராஜ், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உடனிருந்தனர்.

    • மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்காக இதுவரை எவ்வளவு ரூபாய் அரசின் சார்பாக செலவிடப்பட்டுள்ளது?
    • ஒரு கோடி பயனாளிகளின் முழு விவரங்களையும் முதல்-அமைச்சரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் வெளியிட வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    29.12.2022 அன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே ஒன்றாவது பயனாளிக்கு மருத்துவப் பெட்டகத்தை வழங்கியதாக தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டிருந்தது.

    ஆனால் மாநில மருத்துவத்துறை அதிகாரிகள் உண்மையில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தின்கீழ் இதுவரை ஒரு கோடி பேருக்கும் மேல் மருந்துப் பெட்டகங்கள் நோயாளிகளுக்கு கொடுத்ததாக எந்தவிதமான புள்ளி விவரக் குறிப்பும் இல்லை என்று தெரிவித்ததாக நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன.

    மேலும், நோயாளிகள் பற்றிய புள்ளி விவரங்களில் டூப்ளிகேஷன்-அதாவது ஒரே புள்ளி விவரம், இரண்டு, மூன்று முறை பதிவு செய்யப்பட்டதால், ஒரு கோடி பேருக்குமேல் பயன் பெற்றுள்ளனர் என்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    எனது தலைமையிலான அம்மா ஆட்சியில் செயல்படுத்திய வலி நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு சிகிச்சை என்ற திட்டத்தில், ஒரு வாகனத்தை மட்டும் கூடுதலாக்கி, 'மக்களைத் தேடி மருத்துவம்' என்று மீண்டும் ஸ்டிக்கர் ஒட்டி செயல்படுத்தி இருக்கிறது.

    ஆட்சிக்கு வந்து 20 மாதங்கள் முடிவடைந்த பிறகும், இப்போதும் முந்தைய ஆட்சியின் மீது குறைகள் சொல்லியே விளம்பர ஆட்சி நடத்தி வரும் இந்த அரசு, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்காக இதுவரை எவ்வளவு ரூபாய் அரசின் சார்பாக செலவிடப்பட்டுள்ளது என்றும், ஒரு கோடி பயனாளிகளின் முழு விவரங்களையும் முதல்-அமைச்சரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மக்களை தேடி மருத்துவம் திட்டம் மலை கிராமங்கள், குக்கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமின்றி சென்னை போன்ற பெருநகரங்களிலும் வசிக்கும் மக்களுக்கும் பயன் உள்ளதாக இருந்து வருகிறது.
    • மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் சேர்ந்த பின்னர் மருந்து-மாத்திரைகள் வீடு தேடி வந்து விடுவதாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள திலகவதி கூறினார்.

    சென்னை:

    நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இதய பிரச்சினை போன்ற நோய்களால் அவதிப்படும் நோயாளிகளின் இல்லத்துக்கு மருத்துவ குழுவினர் நேரடியாக சென்று மருந்து-மாத்திரைகள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி தொடங்கிவைத்தார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சாமனப்பள்ளி கிராமத்தில் உள்ள நோயாளியின் வீட்டுக்கு நேரில் சென்று மருந்து-மாத்திரைகள் வழங்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். இந்த திட்டம் தொடங்கப்பட்ட போது 30 லட்சம் நோயாளிகள் பெயர்கள் இணைக்கப்பட்டிருந்தன. தற்போது இந்த திட்டத்தில் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் இணைந்துள்ளனர்.

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த திட்டத்தில் நோயாளிகள் எண்ணிக்கை ஒவ்வொரு இலக்கை தாண்டும் போதும் அந்த நோயாளி வீட்டுக்கே நேரில் சென்று மருந்து-மாத்திரைகளை வழங்கி நலம் விசாரித்து, இந்த திட்டத்தை மெருக்கேற்றி வருகிறார்.

    தற்போது இந்த திட்டம் மலை கிராமங்கள், குக்கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமின்றி சென்னை போன்ற பெருநகரங்களிலும் வசிக்கும் மக்களுக்கும் பயன் உள்ளதாக இருந்து வருகிறது. சென்னையில் இந்த திட்டத்தில் ஆயிரக்கணக்கான நோயாளிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. மக்களை தேடி மாதந்தோறும் மருந்து-மாத்திரைகள் முறையாக வழங்கப்படுகிறதா? என்பது குறித்து இந்த திட்டத்தில் இடம் பெற்றுள்ள நோயாளிகள் சிலர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

    சென்னை செங்குன்றம் காவங்கரை அழகிரி தெருவை சேர்ந்த ராஜேஸ்வரி (வயது 60):-

    நான் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். இதற்காக கடந்த 7 ஆண்டுகளாக மாத்திரை எடுத்து வருகிறேன். மருந்து-மாத்திரைக்கே மாதம் பெரும் தொகை செலவாகி வந்தது. இந்த நிலையில் முதல்-அமைச்சரின் 'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தில் நான் இணைந்தேன். அதன் பின்னர் வீடு தேடி மாத்திரைகள் வந்தன.

    தற்போது என்னை நீரிழிவு நோய் பரிசோதனை செய்துவிட்டு வருமாறு கூறுகின்றனர். எனக்கு சிறிது தூரம் நடந்தாலும் மூச்சு அதிகம் வாங்குகிறது. இதனால் நான் நீரிழிவு நோய் பரிசோதனை செய்ய முடியாமல் வீட்டிலேயே உள்ளேன். எனவே வீடு தேடி மருந்து-மாத்திரை வழங்குவது போன்று மருத்துவ குழுவினரையும் அனுப்பி இந்த பரிசோதனைகளை மேற்கொண்டால் என்னை போன்ற நோயாளிகள் பெரிதும் பயன் அடைவார்கள். மேலும் எனக்கு கால்வலி மாத்திரையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள திலகவதி (52) என்ற பெண் கூறியதாவது:-

    நான் நீரிழிவு நோய்க்கு 3 ஆண்டுகளாக மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் சேர்ந்த பின்னர் மருந்து-மாத்திரைகள் வீடு தேடி வந்து விடுகிறது. இதனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் அலைச்சல் இல்லாமல் உள்ளது.

    ஆஸ்பத்திரிக்கு சென்று வீடு திரும்புவதற்குள் உடலும், மனதும் சோர்வு அடைந்துவிடும். தற்போது அந்த நிலைமை தவிர்க்கப்பட்டுள்ளது நிம்மதி அளிக்கிறது. மருந்து-மாத்திரைகளை கொண்டு வரும் பணியாளர்களும் கனிவுடனும், அக்கறையுடனும் நடந்துகொள்கிறார்கள். இந்த திட்டம் இன்னும் பல நோயாளிகளை சென்றடைய வேண்டும் என்பது எனது விருப்பம் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை கொளத்தூர் லட்சுமிபுரம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாலமுருகன் (54):-

    நான் 5 ஆண்டுகளுக்கு முன்பு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டேன். அதன் பின்னர் மாதம் தவறாமல் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று மருந்து-மாத்திரை வாங்கி சாப்பிட்டு வருகிறேன்.

    சில மாதங்களுக்கு முன்பு வீடு, வீடாக உடல் பரிசோதனை செய்ய வந்த பணியாளர்கள் எனது பெயரை குறிப்பெடுத்து சென்றனர். எனினும் நான் தொடர்ந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நேரில் சென்றுதான் மாத்திரைகளை வாங்கி வருகிறேன். யாரும் வீடு தேடி வந்து மருந்து-மாத்திரைகள் தருவது இல்லை. நீங்கள் சொல்லிதான் இந்த திட்டத்தில் என் பெயர் இருக்கிறது என்பதே தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை கொளத்தூர் லட்சுமிபுரம் வ.உ.சி. நகரை சேர்ந்த சமையல் தொழிலாளி வெங்கடேஸ்வர் (64):-

    நான் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளேன். கொலஸ்ட்ரால் பிரச்சினையும் இருக்கிறது. சுகாதார நிலையத்தில் மருந்து-மாத்திரை வாங்கி சாப்பிட்டு வந்தேன். இதற்காக ஒவ்வொரு மாதமும் சுகாதார நிலையத்துக்கு செல்வேன். நோயாளிகள் கூட்டம் அதிகம் இருக்கும் சமயத்தில் அரை நாள் வீணாகிவிடும். இதனால் அன்றைய தினம் தொழிலுக்கு செல்ல முடியாமல் வருவாய் இழப்பு ஏற்படும். தற்போது 'மக்களை தேடி மருத்துவ திட்டம்' என்னை போன்ற தினக்கூலி தொழிலாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

    மாதத்தின் முதல் வாரத்தில் அனைத்து மாத்திரைகளும் முறையாக வீட்டுக்கு வந்து விடுகின்றன. இதனால் சுகாதார நிலையத்துக்கு செல்லும் நேரம் மிச்சமாவதால் நான் தொழிலுக்கு நிம்மதியாக சென்று வருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை செங்குன்றம் காவங்கரை அழகிரி தெருவை சேர்ந்த தங்கபுஷ்பம் (70):-

    எனது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் ஆகும். நான் இங்கு எனது மகள் வீட்டில் வசித்து வருகிறேன். நீரிழிவு நோயால் நான் மிகவும் சிரமப்படுகிறேன்.

    இந்த தள்ளாத வயதில் மருந்து-மாத்திரைகள் வாங்குவதற்கு மிகவும் சிரமம் அடைகிறேன். எனவே 'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தில் என்னையும் சேர்க்க வேண்டும். வீடு தேடி மருந்து-மாத்திரை வழங்கினால் மகிழ்ச்சி அடைவேன். உடல்நலமும் தேறிவிடும் என்ற நம்பிக்கை ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதே கோரிக்கையை அதே பகுதியை சேர்ந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள கீதா என்ற 54 வயது பெண்மணியும் வைத்துள்ளார்.

    இந்தியாவிலேயே முன்னோடி திட்டங்களில் ஒன்றாக மக்களை தேடி மருத்துவ திட்டம் பார்க்கப்படுகிறது. எனவே இந்த திட்டத்தின் பயன் நோயாளிகளுக்கு முறையாக சென்றடைகிறதா? என்பதை அவ்வப்போது அதிகாரிகள் நோயாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று கண்காணிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பயனாளிகளின் கோரிக்கையாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

    • மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் இன்றைய அவல நிலை குறித்து பலதரப்பட்ட மக்களின் புலம்பல்கள் ஊடகங்களில் வருகின்றன.
    • அரசின் துறைகள் ஒவ்வொன்றும் மக்களின் நலனுக்கான திட்டங்களை தீட்டி செயல்பட வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. அரசால் 'அம்மா மினி கிளினிக்' என்று ஆரம்பிக்கப்பட்டு சாதாரண காய்ச்சல், சளி, இருமல், சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் வீடுகளுக்கு அருகே உள்ள 'அம்மா மினி கிளினிக்'குகளுக்கு சென்று மருத்துவ உதவி பெற்று வந்த ஒரு அற்புதமான திட்டத்தை மக்களிடம் ஏகோபித்த ஆதரவை பெற்ற ஒரு திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு முடக்கி 'மக்களை தேடி மருத்துவம்' என்ற ஒரு பயன் இல்லாத திட்டத்தை அறிமுகப்படுத்தி அதற்கு பிரமாண்டமாய் ஒரு தொடக்க விழாவை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்த விடியா தி.மு.க. அரசு நடத்தியது. தற்போது அந்த திட்டம் தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ளதா? இல்லையா? என்று தமிழக மக்களுக்கு தெரியவில்லை.

    மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் இன்றைய அவல நிலை குறித்து பலதரப்பட்ட மக்களின் புலம்பல்கள் ஊடகங்களில் வருகின்றன. அரசின் துறைகள் ஒவ்வொன்றும் மக்களின் நலனுக்கான திட்டங்களை தீட்டி செயல்பட வேண்டும். குறிப்பாக மக்கள் நல்வாழ்வு துறை மக்களின் உயிரை காக்கும் பணியில் ஈடுபட வேண்டும்.

    கடந்த 14 மாத கால தி.மு.க. ஆட்சியில், அம்மா அரசின் பல்வேறு நல்ல திட்டங்களை எல்லாம் முடக்கியதோடு அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடும் பணியை கண்ணும் கருத்துமாக மக்கள் நல்வாழ்வுத்துறை செய்து வருகிறது.

    அம்மா அரசின் ஆட்சியில் கொரோனாவிற்கு மருந்தே கண்டுபிடிக்கப்படாத காலத்தில் தனியார் மருத்துவமனைகள் பல இயங்காத நேரத்தில் இப்போதுள்ள அதே அரசு மருத்துவர்கள் தங்கள் உயிரை பணயமாக வைத்து கொரோனாவிற்கும், மற்ற அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்தனர்.

    குறிப்பாக அரசு மகப்பேறு மருத்துவமனைகள் மூலம் பயனடைந்த தாய்மார்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்ததை நான் இங்கு நினைவு கூர்கிறேன். அதே அரசு மருத்துவமனைகளுக்கே மக்கள் செல்ல அஞ்சும் நிலையை அரசு ஏற்படுத்தி உள்ளது கண்டிக்கத்தக்கதாகும்.

    வெற்று விளம்பரத்திற்காக மக்களை தேடி மருத்துவம் என்று அறிவித்து விட்டு முதல்-அமைச்சரை வைத்து போட்டோ ஷூட் நடத்திவிட்டு மக்களை தேடி மருத்துவத்தை தேடி அலைய வைக்கும் போக்கை அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

    காழ்ப்புணர்ச்சி அரசியலை ஓரம்கட்டிவிட்டு, மக்களின் நலனுக்காக அம்மாவின் அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட 'அம்மா மினி கிளினிக்' திட்டத்தை மீண்டும் தொடங்கிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • 15 போ் கொண்ட குழு மூலம் ஏழை, எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    • இன்னுயிா் காப்போம் திட்டத்தின் மூலம் உயிரிழப்புகள் குறைந்துள்ளது.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவில் சொரியங்கிணத்துப்பாளையத்தில் வட்டார அளவிலான இலவச மருத்துவ முகாமை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    வட்டார அளவிலான மருத்துவ முகாம்களில் மருத்துவா், மகப்பேறு மருத்துவா், குழந்தை நல மருத்துவா் உள்ளிட்ட 15 போ் கொண்ட குழு மூலம் ஏழை, எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.மேலும் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் மூலம் சா்க்கரை வியாதி, உயா் ரத்த அழுத்த பாதிப்பு, தோ்ந்தெடுக்கப்பட்ட நோய்களுக்கு இல்லம் தேடிச் சென்று சிகிச்சை வழங்கப்படுகிறது.

    சாலை விபத்தில் பாதிக்கப்படுபவா்களுக்கு 48 மணிநேர உடனடி சிகிச்சை மேற்கொள்ளும் இன்னுயிா் காப்போம் திட்டத்தின் மூலம் உயிரிழப்புகள் குறைந்துள்ளன.

    திருப்பூா் மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின்கீழ் 11.55 லட்சம் பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்து 1,55,000 பேருக்கு இலவச மருந்துப் பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றனா்.

    தொடா்ந்து, தமிழ்நாடு நகா்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ் வெள்ளக்கோவில் நகராட்சிக்குட்பட்ட பூங்காக்கள், சாலையோரங்களில் ரூ.50.81 லட்சம் மதிப்பீட்டில் 18,489 மரக்கன்றுகள் நடும் பணியையும் அமைச்சா் துவக்கிவைத்தாா்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் டாக்டா் ஜெகதீஸ்குமாா், வெள்ளக்கோவில் நகா்மன்றத் தலைவா் கனியரசி முத்துக்குமாா், நகராட்சி ஆணையா் ஆா்.மோகன்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

    • மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் உடன்குடி ஒன்றியத்தில் 14 இடங்களில் மக்கள் குழு சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
    • திட்டத்தின் பயன்கள், மக்களின் சுகாதாரம், அவசர முதல் உதவிகள், முதியோர் பயன்பெறும் விதம் குறித்து மெஞ்ஞானபுரம் வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரிமின் பேசினார்.

    உடன்குடி:

    தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் உடன்குடி ஒன்றியத்தில் 14 இடங்களில் மக்கள் குழு சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

    மெஞ்ஞானபுரம் வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரிமின் தலைமை தாங்கி மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் பயன்கள், மக்களின் சுகாதாரம், அவசர முதல் உதவிகள், முதியோர் பயன்பெறும் விதம் குறித்து பேசினார்.உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவர் மால்ராஜேஷ் முன்னிலை வகித்தார்.வட்டார செவிலியர்கள் பேச்சியம்மாள், மணிமேகலை, உடன்குடி வட்டார தி.மு.க. வர்த்தக அணி அமைப்பாளர் ராஜேந்திரன், நகர மகளிரணி அமைப்பாளர் தேவி, உடன்குடிவட்டார காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜெயராமன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • தி.மு.க. அரசு பொறுப்பேற்ற ஒரு வருடத்தில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளது.
    • வருகிற பருவமழையின்போது மழைநீர் தேங்காத நிலை ஏற்படுத்தப்படும்.

    சென்னை:

    வளசரவாக்கம் பகுதியில் ரூ.2.37 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னையில் ஏற்படும் மழை நீர் தேக்கத்துக்கு தீர்வு காண்பதற்கு கடந்த ஆட்சி காலத்தில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. வடிகால்வாய்களில் ஏற்பட்ட அடைப்புகளை நீக்குவது, இணைப்புகள் இல்லாத இடங்களில் இணைப்புகளை ஏற்படுத்துவது போன்ற பணிகளை நிறைவேற்றவில்லை.

    தி.மு.க. அரசு பொறுப்பேற்ற ஒரு வருடத்தில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளது.

    ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவினர் ஒவ்வொரு பகுதியிலும் ஆய்வு செய்து தீர்வுக்கான பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து இடங்களிலும் பணிகள் நடக்கிறது.

    வருகிற பருவமழையின்போது மழைநீர் தேங்காத நிலை ஏற்படுத்தப்படும்.

    மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 72 லட்சத்து 87 ஆயிரத்து 659 பேருக்கு இலவச மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1 லட்சத்து 87 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மேயர் பிரியா, கணபதி எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×